ராஜ்தாக்கரே கடிதத்தை வீடு, வீடாக வினியோகம் செய்த 8 பேர் பிடிபட்டனர்

ஒலி பெருக்கி விவகாரம் தொடர்பாக ராஜ்தாக்கரே கடிதத்தை வீடு வீடாக வினியோகம் செய்த 8 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
மும்பை,
ஒலி பெருக்கி விவகாரம் தொடர்பாக ராஜ்தாக்கரே கடிதத்தை வீடு வீடாக வினியோகம் செய்த 8 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
வீடு வீடாக வினியோகம்
நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கடந்த மாதம் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றப்பட வேண்டும் எனவும், அவ்வாறு அகற்றப்படாத மசூதிகள் அருகே அனுமன் பஜனை ஒலிபரப்புவோம் என எச்சரித்து இருந்தார்.
இது ஒரு மத பிரச்சினை அல்ல சமூக பிரச்சனை எனவும், இந்த விவகாரம் தொடர்பாக அவர் டுவிட்டரில் கடிதம் ஒன்றை தொண்டர்களுக்கு பகிர்ந்து கொண்டார். இதில் ஒலிபெருக்கி பிரச்சினைக்கு நிரந்தர முடிவு கட்ட வேண்டும் எனவும், இந்த கடிதம் உங்கள் பகுதியில் ஒவ்வொரு வீட்டையும் சென்று அடைய வேண்டும் எனவும் நமது கோரிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு தேவை என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
8 பேர் சிக்கினர்
இதனை தொடர்ந்து மும்பை புறநகர் செம்பூரில் உள்ள காதி மெஷின் பகுதியில் நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் திரண்டனர். மேலும் வீடு, வீடாக சென்று அவரது கடிதத்தை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டு கடிதத்தை வினியோகம் செய்ய முயன்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். சம்பவம் குறித்து போலீசார் 188-வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அங்கிருந்த 6 பேரை கைது செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதே போல மற்றொரு சம்பவத்தில் காட்கோபர் பகுதியில் ராஜ்தாக்கரேவின் கடிதத்தை வினியோகம் செய்ய முயன்ற 2 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். சில மணி நேரம் கழித்து விசாரணைக்கு பிறகு வீட்டிற்கு செல்ல அனுமதித்தனர்.






