மும்பை விமான நிலையத்தில் ரூ.9½ கோடி தங்கம் கடத்தி வந்த 9 பெண்கள் கைது

மும்பை விமானநிலையத்தில் ரூ.9½ கோடி தங்கம் கடத்தி வந்த கென்யாவை சேர்ந்த 9 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை விமானநிலையத்தில் ரூ.9½ கோடி தங்கம் கடத்தி வந்த கென்யாவை சேர்ந்த 9 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ரகளையில் ஈடுபட்ட பயணிகள்
மும்பை தங்க கடத்தல் மையமாக மாறி உள்ளது. வெளிநாடுகளில் நூதன முறையில் நிதி தலைநகருக்கு தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு பெண்கள் மூலம் தங்கம் கடத்தி வரப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய அமீரகத்தில் இருந்து 18 கிலோ தங்கம் கடத்தி வந்த 18 சூடான் நாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் சம்பவத்தன்று கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து வரும் விமானத்தில் பெண் பயணிகள் அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாக மும்பை விமான புலனாய்வு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தப்பியோட முயற்சி
இதையடுத்து சம்பவத்தன்று நைரோபியில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சில பெண் பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அதிகாரிகள் அந்த பயணிகளை தனியறையில் அழைத்து பெண் அதிகாரிகள் மூலம் சோதனை நடத்த முடிவு செய்தனர். அதற்கு பெண் பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டனர். சில பெண் பயணிகள் தப்பியோடவும் முயற்சி செய்தனர்.
ரூ.9.4 கோடி தங்கம் பறிமுதல்
எனினும் சுங்கத்துறையினர் அவர்களை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்த பையில் இருந்து 18.28 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9.4 கோடியாகும்.
இதையடுத்து அதிகாரிகள் தங்க கடத்தலில் ஈடுபட்ட கென்யா நாட்டை சேர்ந்த 9 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






