அடுக்குமாடி கட்டிடத்தில் ரூ.240 கோடிக்கு வீடு வாங்கிய தொழில் அதிபர்


அடுக்குமாடி கட்டிடத்தில் ரூ.240 கோடிக்கு வீடு வாங்கிய தொழில் அதிபர்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் தொழில் அதிபர் ஒருவர் ரூ.240 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளார். இது நாட்டிலேயே அதிக விலையாக பார்க்கப்படுகிறது.

மும்பை,

மும்பையில் தொழில் அதிபர் ஒருவர் ரூ.240 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளார். இது நாட்டிலேயே அதிக விலையாக பார்க்கப்படுகிறது.

ரூ.240 கோடிக்கு வீடு

நெரிசல் மிகுந்த மும்பையில் பெரும்பாலான மக்கள் சுமார் 300 சதுர அடியிலான வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அதைவிட 100 மடங்கு பெரிய 30 ஆயிரம் சதுர அடி வீட்டை மும்பையில் 'வெல்ஸ்பன்' குழும தலைவர் பி.கே. கோயங்கா ரூ.240 கோடிக்கு வாங்கி உள்ளார். நாட்டிலேயே மிகவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடாக இது பார்க்கப்படுகிறது.

தொழில் அதிபர் பி.கே. கோயங்கா வாங்கிய அந்த ஆடம்பர வீடு ஒர்லி அன்னி பெசன்ட் ரோட்டில் உள்ள 'திரி சிக்ஸ்டி வெஸ்ட்' என்ற 66 மாடி குடியிருப்பில் அமைந்து உள்ளது. இதில் 63, 64, 65-வது மாடியில் தொழில் அதிபர் பி.கே. கோயங்கா வாங்கிய வீடு உள்ளது. கடந்த புதன்கிழமை பத்திரப்பதிவு செய்த தொழில் அதிபர், அதில் விரைவில் குடியேற உள்ளார்.

நாட்டிலேயே அதிக விலை

ரூ.240 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு விற்பனை ஆனது குறித்து கட்டுமான நிறுவன அதிபர் பங்கஜ் கபூர் கூறுகையில், "இந்தியாவில் இதுவரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட அடுக்குமாடி வீடு இது தான். வரும்காலங்களில் இதைவிட அதிக விலைக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

இதேபோல 'திரி சிக்ஸ்டி வெஸ்ட்' அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு கட்டிடத்தில் கட்டுமான அதிபர் விகாஸ் ஒபராயும் ரூ.240 கோடிக்கு வீடு வாங்கி உள்ளார். இவர் தான் கட்டுமான அதிபர் சுதாகர் ஷெட்டியுடன் சேர்ந்து இந்த அடுக்குமாடி கட்டிடத்தை கட்டியது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story