மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தந்தை; அகமது நகரில் அதிர்ச்சி சம்பவம்

மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் 2 குழந்தைகளை தந்தை கிணற்றில் வீசி கொன்ற அதிர்ச்சி சம்பவம் அகமது நகரில் நடந்துள்ளது.
மும்பை,
மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் 2 குழந்தைகளை தந்தை கிணற்றில் வீசி கொன்ற அதிர்ச்சி சம்பவம் அகமது நகரில் நடந்துள்ளது.
மனைவியுடன் சண்டை
அமகதுநகர் மாவட்டம் கர்ஜத் கிராமத்தில் உள்ள அல்சுன்டே கிராமத்தை சேர்ந்தவர் கோகுல் சிர்சாகர்(வயது 38). சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இருவரும் மாறி, மாறி ஒருவரை, ஒருவர் வசை பாடிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் எல்லை மீறியது. இதனால் ஆத்திரமடைந்த கோகுல் சிர்சாகர் தனது 8 வயது மகள் ருதுஜா மற்றும் 4 வயது மகன் வேதாந்த் ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியேறினார். ஆத்திரத்தில் தலைகால் புரியாத அவர் குழந்தைகளை நேராக கிராம பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்கு அழைத்து சென்றார்.
கைது
அங்கு சென்றதும் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் 2 பேரையும் தூக்கி கிணற்றுக்குள் வீசினார். கல்நெஞ்சம் கொண்ட தந்தையின் செயலை பார்த்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் இறங்கி குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் குழந்தைகள் இருவரையும் பிணமாக தான் மீட்க முடிந்தது. போலீசார் குழந்தைகளை கொலை செய்த கோகுல் கிர்சாகரை கைது செய்ததுடன், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையே தனது குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






