ரெயில் பயணிகளை குறி வைத்து நகை, செல்போன் அபேஸ் செய்த 8 பேர் கும்பல் கைது
ரெயில் பயணிகளை குறிவைத்து நகை, செல்போனை பறித்து சென்ற கும்பலை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள்.
மும்பை,
ரெயில் பயணிகளை குறிவைத்து நகை, செல்போனை பறித்து சென்ற கும்பலை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள்.
போலீசில் புகார்
மும்பை குர்லா ரெயில் நிலையத்தில் பயணி ஒருவர் ரெயிலில் ஏறும் போது 4 பேர் கொண்ட கும்பலிடம் வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் அக்கும்பல் பயணியை பிடித்து தாக்கினர். இதில் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள தங்கசங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுபற்றி வடலா ரெயில்வே போலீசில் பயணி புகார் அளித்தார். இ்ந்த புகாரின் படி போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் 4 பேரின் அடையாளம் தெரியவந்ததை தொடர்ந்து செம்பூர் திலக்நகரில் பதுங்கி இருந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த கும்பலுடன் தொடர்புடைய மற்றொரு கும்பலும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
8 பேர் கைது
இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்த மேலும் 4 பேரை பிடித்து கைது செய்தனர். மேற்கு வங்காளத்தை சேர்ந்த கும்பலான இவர்கள் ரெயில் நிலையத்தில் ஏறும் பயணிகளை குறிவைத்து ஏதோ ஒரு சாக்கு போக்கில் சண்டை போடுவர். பின்னர் கும்பலை சேர்ந்த ஒருவர் பயணியிடம் இருந்து நகை, செல்போன், மணிபர்சை நைசாக அபேஸ் செய்து விட்டு அங்கிருந்து தப்பி செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக தெரியவந்தது.
கும்பலிடம் இருந்து ரூ.5 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது மும்பையில் 7 வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.