நாசிக்கில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தைப்புலி

நாசிக்,
நாசிக்கில் வடலா ரோடு ஆயிஷா நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணி அளவில் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்தது. இதனை கண்ட அங்கிருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு ஓடினர். அந்த சிறுத்தைப்புலி அங்குள்ள பங்களா வீட்டிற்குள் நுழைந்தது. பின்னர் நிறுத்தப்பட்டு இருந்த காரின் அடியில் பதுங்கியது. இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் பதுங்கி கிடந்த சிறுத்தைப்புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இருள் சூழ்ந்த நிலையில் காணப்பட்டதால் சிறுத்தைப்புலி பிடிபடவில்லை.
இதனால் வனத்துறையினர் சிறுத்தைப்புலி மீது மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் கூண்டில் போட்டு தூக்கி சென்றனர். சுமார் 3 மணி நேரம் போக்கு காட்டிய சிறுத்தைப்புலி பிடிபட்ட பின்னர் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.






