தானேயில் தாயின் கையில் இருந்த குழந்தையை பறிக்க முயன்ற குரங்கு- போராடி மீட்டதில் குழந்தை படுகாயம்


தானேயில் தாயின் கையில் இருந்த குழந்தையை பறிக்க முயன்ற குரங்கு- போராடி மீட்டதில் குழந்தை படுகாயம்
x
தினத்தந்தி 26 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-27T00:15:55+05:30)

தானேயில் தாயின் கையில் இருந்த குழந்தையை பறிக்க முயன்ற குரங்கு தாக்கியதில் குழந்தை படுகாயம் அடைந்தது.

மும்பை,

தானேயில் தாயின் கையில் இருந்த குழந்தையை பறிக்க முயன்ற குரங்கு தாக்கியதில் குழந்தை படுகாயம் அடைந்தது.

குரங்கு குழந்தையை தாக்கியது

தானேயில் உள்ள ஷீல் டைகர் போலீஸ் நிலையத்துக்கு பெண் ஒருவர் தனது ஒரு மாத பெண் குழந்தையுடன் புகார் அளிக்க வந்தார். அப்போது, போலீஸ் நிலைய வளாகத்தில் குரங்கு ஒன்று சுற்றித்திரிந்தது. அந்த குரங்கு திடீரென பெண்ணின் கையில் இருந்த குழந்தையை பறிக்க முயன்றது. ஆனால் குழந்தையை தாய் கெட்டியாக பிடித்து கொண்டார்.

இதில், குரங்கு தாக்கியதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றார். அங்கு குழந்தையின் தலையில் 4 தையல் போடப்பட்டது. குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

போராடி மீட்டேன்

இதுபற்றி குழந்தையின் தாய் கூறுகையில், "போலீஸ் நிலைய வளாகத்தில் நின்ற குரங்கை துரத்த முயன்றேன். அப்போது சீற்றம் அடைந்த குரங்கு என் கையில் இருந்து குழந்தையை பறிக்க முயன்றது. ஆனால் குழந்தையை குரங்கிடம் இருந்து போராடி மீட்டேன். எனது குழந்தை படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து விட்டது" என்றார்.

இதற்கிடையே தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் குழந்தையை தாக்கிய குரங்கை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story