சுத்தியலால் தாக்கி நண்பரை கொன்ற வாலிபர் கைது

மும்பை,
மும்பை போரிவிலி தேவிபாடா பகுதியை சேர்ந்தவர் ராம்புகார் (வயது30). அதே பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (33). இருவரும் மாவுமில்லில் வேலை பார்த்து வந்தனர். அஜித்குமார் பல நேரங்களில் ராம்புகாரை இழிவாக பேசி வந்தாக தெரிகிறது. இதனை ராம்புகார் அவரை கண்டித்து வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அஜித்குமார் மீண்டும் அவரை இழிவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம்புகார் அங்கு கிடந்த சுத்தியலை எடுத்து அஜித்குமாரின் தலையில் பலமாக தாக்கி உள்ளார். இதனால் அவரின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து ராம்புகார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அஜித் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற ராம்புகாரை சில மணி நேரத்தில் கைது செய்தனர்.






