மலாடு குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து

மலாடு குடிசைப்பகுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை,
மலாடு குடிசைப்பகுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
குடிசைப்பகுதியில் தீ
மலாடு அப்பா பாடா குடிசைப்பகுதியில் உள்ள வீட்டில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இந்தநிலையில் தீப்பிடித்த வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.
வீடுகள் எரிந்து நாசம்
வீடுகள் எரிந்து அந்த பகுதியே புகை மண்டலமானது. பொது மக்கள் தங்கள் கண் முன்னே வீடுகள் எரிவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். இந்தநிலையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி குடிசைப்பகுதியில் எரிந்த தீயை அணைத்தனர். விபத்தில் பல குடிசை வீடுகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.






