கட்சிரோலி மற்றும் சந்திராப்ப்பூரில் 13 பேரை கொன்ற புலி சிக்கியது

13 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர்.
மும்பை,
13 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர்.
ஆட்கொல்லி புலி சிக்கியது
கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்டங்களில் புலி ஒன்று மனித வேட்டையாடி வந்தது. இந்த புலி அந்த பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியது. இதையடுத்து சி.டி.-1 என்று அழைக்கப்படும் இந்த புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
குறிப்பாக புலியின் நடமாட்டம் இருந்த கட்சிரோலி வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் வட்சா வனப்பகுதியில் நேற்று வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி அந்த புலியை பிடித்தனர்.
13 பேரை கொன்றது
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிடிபட்ட புலி வட்சா வனப்பகுதியில் 6 பேரையும், பண்டாராவில் 4 பேரையும், சந்திராப்பூர் மாவட்டம் பிரமாபுரியில் 3 பேரையும் கொன்றதாக கருதப்படுகிறது. எனவே அந்த புலியை பிடிக்க கடந்த 4-ந் தேதி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து வனத்துறையினரின் தீவிர முயற்சியால் அந்த புலி பிடிபட்டது. தற்போது அந்த புலி நாக்பூரில் கோரேகாவாடா மீட்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
மனித வேட்டையாடி வந்த புலி பிடிப்பட்டது கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்ட மக்கள் இடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.






