திருட்டு வழக்கில் தலைமறைவு- தமிழகத்தை சேர்ந்தவர் 15 ஆண்டுக்கு பிறகு கைது


திருட்டு வழக்கில் தலைமறைவு- தமிழகத்தை சேர்ந்தவர் 15 ஆண்டுக்கு பிறகு கைது
x
தினத்தந்தி 25 March 2023 12:15 AM IST (Updated: 25 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கையில் குத்தி இருந்த பச்சை மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்தவர் போலீசில் பிடிபட்ட சம்பவம் நடந்து உள்ளது.

மும்பை,

கையில் குத்தி இருந்த பச்சை மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்தவர் போலீசில் பிடிபட்ட சம்பவம் நடந்து உள்ளது.

தலைமறைவு குற்றவாளி

மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது63). இவரை 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாம்பே துறைமுக பகுதியில் எண்ணெய் திருடிய வழக்கில் ஆர்.ஏ.கே. மார்க் போலீசார் கைது செய்தனர். வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவானார். போலீசார் தேடிய போது ஆறுமுகம் தமிழ்நாட்டுக்கு சென்றுவிட்டதாக தகவல் கிடைத்து உள்ளது. சில போலீஸ் உளவாளிகள் அவர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். எனவே போலீசார் அவரை தேடாமல் இருந்தனர்.

சமீபத்தில் ஆர்.ஏ.கே. மார்க் போலீசார் தலைமறைவு குற்றவாளிகளை தேடினர். அப்போது ஆறுமுகத்தின் மகன் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. போலீசார் மகனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அதன் மூலம் அவர் குறிப்பிட்ட எண்ணிக்கு அதிக முறை போன் செய்வதை கண்டுபிடித்தனர். போலீசார் ஆறுமுகத்தின் மகன் அடிக்கடி பேசும் செல்போன் எண்ணை கண்காணித்தனர். அப்போது அந்த எண்ணை பயன்படுத்தும் நபர் கேட்வே ஆப் இந்தியா, ஜூகு போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு அதிகம் செல்வது தெரியவந்தது.

கையில் குத்திய பச்சையால் சிக்கினார்

இதன் மூலம் அந்த நபர் சுற்றுலா பஸ்சில் வேலை பார்க்கலாம் என யூகித்த போலீசார், சம்பவத்தன்று போர்ட் பகுதியில் உள்ள மும்பை தர்ஷன் நடத்தும் டிராவல் ஏஜென்சியில் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஆறுமுகம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர் தான் ஆறுமுகம் இல்லை என மறுத்தார்.

இதையடுத்து போலீசார் பழைய ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில் ஆறுமுகம் கையில் இதயம், சிலுவை பச்சை இருப்பது தெரியவந்தது. போலீசார் டிராவல் ஏஜென்சியில் பிடிபட்டவரின் கைகளில் சோதனை செய்தனர். அப்போது அவரின் கையிலும் இதயம், சிலுவை பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து பிடிபட்டவர் தான் ஆறுமுகம் என்பதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் திருட்டு வழக்கில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆறுமுகத்தை கைது செய்தனர். பிடிபட்ட ஆறுமுகம் மீது சயான் கோலிவாடா பகுதியில் வீடு புகுந்த கொள்ளையடித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் கூறினர்.

1 More update

Next Story