நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நிறுவனத்துக்கு வங்கிகள் கடன் வழங்கியதில் முறைகேடு? விசாரணைக்கு அரசு உத்தரவு

நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கின் நிறுவனத்திற்கு வங்கிகள் கடன் வழங்கியதில் முறைகேடு குறித்த விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கின் நிறுவனத்திற்கு வங்கிகள் கடன் வழங்கியதில் முறைகேடு குறித்த விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
முறைகேடு குற்றச்சாட்டு
நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவி ஜெனிலியா தேஷ்முக் இருவரும் இணைந்து நடத்திவரும் தேஷ் அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மகா விகாஸ் அகாடி ஆட்சி காலத்தில் நிலம் ஒதுக்கியதிலும், அந்த நிறுவனத்திற்கு வங்கி கடன் வழங்கியதிலும் முறைகேடு நடந்து இருப்பதாக லாத்தூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் குருநாத் மேகே குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசுக்கு அவர் கோரிக்கை வைத்தார்.
விசாரணை வேண்டும்...
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், "தேஷ் அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் 2021-ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி அன்று பந்தர்பூர் நகர கூட்டுறவு வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. 23 நாட்களில் அக்டோபர் 27-ந் தேதி ரூ.4 கோடி வழங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் லத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2-வது கடனுக்கு விண்ணப்பித்தது. அக்டோபரில் ரூ.61 கோடி கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் மேலும் ரூ.55 கோடி கடன் ஒதுக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று கோரி இருந்தார்.
இதுகுறித்து நேற்று மாநில கூட்டுறவு துறை துணை மந்திரி அதுல் சேவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
உத்தரவு
நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவி ஜெனிலியா தேஷ்முக்கின் வேளாண் நிறுவனத்துக்கு கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்கியதில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பதை சரிபார்க்க உத்தவிடப்பட்டு உள்ளது. விரைவில் விசாரணை முடிவுகள் வெளியாகும்
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார். அவரது மூத்த சகோதரர் அமித் தேஷ்முக் மகா விகாஸ் அகாடி ஆட்சி காலத்தில் மந்திரியாக இருந்தார்.






