மும்பையில் கூடுதலாக ௫,837 கண்காணிப்பு கேமரா- பட்ஜெட்டில் தகவல்

மும்பையில் கூடுதலாக 5 ஆயிரத்து 837 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், ரூ.900 கோடி செலவில் நவிமும்பையில் சைபர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் கூடுதலாக 5 ஆயிரத்து 837 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், ரூ.900 கோடி செலவில் நவிமும்பையில் சைபர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சைபர் பாதுகாப்பு திட்டம்
சைபர் குற்றங்கள் மும்பையில் கடந்த ஆண்டில் 70 சதவீதம் அதிகரித்ததாக சமீபத்தில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் கூறியிருந்தார். நேற்று முன்தினம் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சைபர் குற்றங்களை தடுக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நவிமும்பையில் உள்ள மகாப்பே பகுதியில் ரூ.900 கோடியில் மாநில சைபர் பாதுகாப்பு திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
5,837 கண்காணிப்பு கேமரா
இதேபோல தடயவியல் அறிவியல் ஆய்வக இயக்குனரகம் பலப்படுத்தப்படும், தடயவியல் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும், நவீன நடமாடும் தடயவியல் ஆய்வகங்கள் 45 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. ஜெயில்களில் கூட்ட நெரிசலை குறைக்க மாநிலத்தில் நவீன வசதிகளுடன் 2 புதிய ஜெயில்கள் கட்டப்பட உள்ளது.
500 சிறார்கள் அடைக்கும் வகையில் தேவ்னார்-மான்கூர்டு பகுதியில் சிறார்கள் காப்பகமும் கட்டப்பட உள்ளது.
மும்பையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த 5 ஆயிரத்து 837 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. ஏற்கனவே நகரில் சுமார் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.






