அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படும் ஷிண்டே அரசு விரைவில் கவிழும்- ஆதித்ய தாக்கரே சொல்கிறார்


அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படும் ஷிண்டே அரசு விரைவில் கவிழும்- ஆதித்ய தாக்கரே சொல்கிறார்
x
தினத்தந்தி 8 Feb 2023 7:00 PM GMT (Updated: 8 Feb 2023 7:01 PM GMT)

அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படும் ஷிண்டே அரசு விரைவில் கவிழும் என ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.

ஜல்னா,

அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படும் ஷிண்டே அரசு விரைவில் கவிழும் என ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.

கட்சியில் பிளவு

சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கூட்டணியில் ஏற்பட்ட பிளவு காரணமாக கவிழ்ந்தது. சிவசேனாவின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சியை உடைந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

இதைதொடர்ந்து ஆளும் அரசை முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்தநிலையில் ஆதித்ய தாக்கரே தனது 'சிவ் சம்பத் யாத்திரை' ஜல்னா மாவட்டத்தில் உள்ள பத்னாபூரில் மேற்கொண்டார்.

அப்போது தொடர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

ஷிண்டேவுக்கு கோரிக்கை

மராட்டிய அரசு தற்போது எப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் இந்த அரசு அதிக நாட்கள் நீடிக்காது. மிக விரைவில் கவிழ்ந்துவிடும். நாட்டின் பல்வேறு முக்கிய தலைவர்களை அவமதித்ததற்காக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை பதவியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தேன். அவர் நமது அடையாள சின்னங்களை அவமதித்துள்ளார். ஆனால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிடம் என்னை எதிர்த்து மும்பை ஒர்லி அல்லது தானேயில் தேர்தலில் போட்டியிடுமாறு சவால் விடுத்து இருக்கிறேன். முதல்-மந்திரி மற்றும் அவரது சகாக்கள் டாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சென்றனர். இதற்கு ரூ.40 கோடி செலவிடப்பட்டு உள்ளது. வெறும் 28 மணி நேரத்தில் 40 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது எப்படி?. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பணத்தை வீணடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story