ஆன்லைனில் மோசடியில் ஈடுபட்ட ஆப்பிரிக்க நாட்டு கும்பல் டெல்லியில் கைது

ஆன்லைனில் மோசடியில் ஈடுபட்ட ஆப்பிரிக்க நாட்டு கும்பலை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
நாக்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரில் ஒரு கும்பல் பொது மக்களிடம் ஆன்லைனில் மோசடியில் ஈடுபடுவதாக நாக்பூர் போலீசாருக்கு புகார் வந்தது. இதுதொடர்பாக நிறுவன உரிமையாளர் பூஷன் ரவீந்திர சாப்லே அளித்த புகாரில், மா்ம கும்பல் அவர் நிறுவனத்தின் பெயர், போன் நம்பரை ஆன்லைன் வணிக நிறுவனத்தில் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து நாக்பூர் சைபர் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர்கள் டெல்லியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் டெல்லி மெக்ரவுலி பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த 3 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஆப்பிரிக்க நாடான கமரூனை சேர்ந்த ராவுல் அமியி தொவுன்கே (29), ஜாக்சன் சாக்தோ (32), ராபர்ட் நக்வா (32) என்பது தெரியவந்தது. 3 பேரையும் நாக்பூர் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






