கிராம பஞ்சாயத்து தேர்தலில் அதிக இடங்களில் மகா விகாஸ் அகாடி வெற்றி- அஜித் பவார் சொல்கிறார்

கிராம பஞ்சாயத்து தேர்தலில் அதிக இடங்களை மகா விகாஸ் அகாடி கைப்பற்றி இருப்பதாக அஜித்பவார் கூறினார்.
மும்பை,
கிராம பஞ்சாயத்து தேர்தலில் அதிக இடங்களை மகா விகாஸ் அகாடி கைப்பற்றி இருப்பதாக அஜித்பவார் கூறினார்.
கிராம பஞ்சாயத்து தேர்தல்
மராட்டியத்தில் உள்ள 7 ஆயிரத்து 751 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகளில் அதிக இடங்களை தேசியவாத காங்கிரஸ் கைப்பற்றி இருப்பதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார் நேற்று பேசினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கிராம பஞ்சாயத்து தேர்தலில் 3,258 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளை மகா விகாஸ் அகாடி கூட்டணி கைப்பற்றி உள்ளது.
பா.ஜனதா மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி இணைந்து 3,013 இடங்களை கைப்பற்றியது.
நட்பு கட்சியினர்
சுயேச்சை உள்பட மற்ற கட்சிகள் 1,361 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். இதில் வெற்றி பெற்ற 761 பேர் மகா விகாஸ் அகாடி கூட்டணியின் நட்பு கட்சியினர் ஆவர்.
இதன்மூலம் மகா விகாஸ் அகாடி மற்றும் நட்பு கட்சிகளை சேர்ந்த மொத்தம் 4,019 பேர் கிராம பஞ்சாயத்து தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பெரும்பான்மையான இடங்களை மகா விகாஸ் அகாடி கைப்பற்றி உள்ளது. வெற்றிக்காக உழைத்த அனைத்து வேட்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களை பாராட்டுகிறேன். கிராமப்புற மக்கள் மகா விகாஸ் அகாடியை ஆதரித்துள்ளனர்.
முற்றிலும் பொய்
கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பா.ஜனதாவும், ஏக்நாத் ஷிண்டே அணியும் அதிக இடங்களை பெற்றதாக அறிவித்தது. இது முற்றிலும் பொய்யானது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வெற்றியை மகா விகாஸ் அகாடி எம்.எல்.ஏ.க்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
கிராம பஞ்சாயத்து தேர்தலில் கட்சி சின்னம் கிடையாது என்பதால், யார்-யார் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் என்று தேர்தல் கமிஷனால் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.






