அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன் உள்ளனர்: தேசியவாத காங்கிரஸ் உடையவில்லை - அஜித்பவார் பேட்டி


அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன் உள்ளனர்: தேசியவாத காங்கிரஸ் உடையவில்லை - அஜித்பவார் பேட்டி
x
தினத்தந்தி 3 July 2023 1:15 AM IST (Updated: 3 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன் உள்ளனர் என்றும், தேசியவாத காங்கிரஸ் உடையவில்லை என்றும் அஜித்பவார் கூறினார். பதவியேற்பு விழாவுக்கு பின்னர் துணை முதல்-மந்திரி அஜித்பவார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மும்பை,

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன் உள்ளனர் என்றும், தேசியவாத காங்கிரஸ் உடையவில்லை என்றும் அஜித்பவார் கூறினார்.

பதவியேற்பு விழாவுக்கு பின்னர் துணை முதல்-மந்திரி அஜித்பவார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கட்சி உடையவில்லை

நாட்டின் வளர்ச்சிக்காக சிவசேனா- பா.ஜனதா ஆட்சியில் அங்கம் வகிக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. எங்களால் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க முடியும் என்றால், ஏன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடியாது. நாகாலாந்திலும் இதேதான் நடந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சி உடையவில்லை. அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் எங்களுடன் உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளுக்கும் எங்களது முடிவை தெரிவித்து உள்ளோம். அவர்களில் சிலர் வெளியூரில் உள்ளனர். மேலும் சிலர் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இன்று மாலைக்குள் மும்பை வந்தடைவார்கள். மேலும் கட்சியின் உயர்மட்டத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. ஜனநாயகத்தில் பெரும்பான்மையினரின் கருத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

பிரதமரின் புகழ்

நமக்கு மிகப்பெரிய நாடு மற்றும் மக்கள் தொகை உள்ளது. இதனால் தான் மாநிலம் மற்றும் நாட்டின் நலன் கருதி பா.ஜனதா- சிவசேனா அரசுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளோம். 1984-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி பெரும் புகழை பெற்றுள்ளார். அவரது தலைமை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. நாட்டை பற்றி சிந்திக்கும் மற்றும் அதற்கேற்ப செயல்படும் ஒரு எதிர்க்கட்சியை எனக்கு காட்டுங்கள். பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் அந்தந்த மாநிலங்களை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.

மந்திரிகள் இலாகா

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றம் உள்பட அனைத்து தேர்தல்களிலும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க நாங்கள் கருதினோம். இது மராட்டியத்திற்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கும். நிர்வாகத்தில் எங்களுக்கு சிறந்த அனுபவம் உள்ளது. இதை நாங்கள் நன்மைக்காக பயன்படுத்த முடிவு செய்தோம். மந்திரிகளின் இலாகாக்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும், அதற்கான பணிகளை உடனடியாக தொடங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.


1 More update

Next Story