அம்ருதா பட்னாவிசை மிரட்டிய வழக்கு: சூதாட்ட தரகர், மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அம்ருதா பட்னாவிசை லஞ்ச வழக்கில் சிக்க வைத்துவிடுவோம் என மிரட்டிய வழக்கில் சூதாட்ட தரகர் அனில் ஜெய்சிங்கானி, அவரது மகள் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.
மும்பை,
அம்ருதா பட்னாவிசை லஞ்ச வழக்கில் சிக்க வைத்துவிடுவோம் என மிரட்டிய வழக்கில் சூதாட்ட தரகர் அனில் ஜெய்சிங்கானி, அவரது மகள் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.
லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு
துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிசுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனிஷ்கா என்ற பெண் அறிமுகம் ஆனார். அவர் பேஷன் டிசைனர் என கூறி அம்ருதா பட்னாவிசுக்கு ஆடை, அணிகலன்களை வழங்கினார். அம்ருதா பட்னாவிஸ் அந்த பெண்ணுடன் பேசி வந்தார்.
திடீரென ஒருநாள் அவர் அம்ருதா பட்னாவிசுக்கு ரூ.1 கோடி தருவதாக கூறினார். அதற்கு கைமாறாக சூதாட்ட தரகரான தனது தந்தை அனில் ஜெய்சிங்கானியை கிரிமினல் வழக்குகளில் இருந்து விடுவிக்க உதவி செய்ய வேண்டும் என்றார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அம்ருதா பட்னாவிஸ், அனிஷ்காவுடன் பேசுவதை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அனிஷ்கா, அம்ருதா பட்னாவிசை லஞ்ச வழக்கில் சிக்க வைக்க திட்டம் போட்டார். இதுதொடர்பாக அவர் அம்ருதா பட்னாவிசுக்கு வேறு செல்போன் எண்ணில் இருந்து வீடியோ ஒன்றை அனுப்பினார். அந்த வீடியோவில் அனிஷ்கா ஒரு பையில் பணத்தை நிரப்புகிறார், பின்னர் அதே பை அம்ருதா பட்னாவிசின் வீட்டில் இருப்பது போல சித்தரிக்கப்பட்டு இருந்தது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
வீடியோவை அனுப்பிய பிறகு அனிஷ்கா அம்ருதா பட்னாவிசை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் வீடியோவை வெளியில் கசியவிடாமல் இருக்க ரூ.10 கோடி தர வேண்டும் என மிரட்டினார். இதுதொடர்பாக அம்ருதா பட்னாவிஸ் மலபார்ஹில் போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்ச் மாதம் அனிஷ்கா, அவரது தந்தை அனில் ஜெய்சிங்லானி, உறவினர் நிர்மலை கைது செய்தனர்.
இந்தநிலையில் வழக்கின் குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி.) போலீசார் மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர். 733 பக்க குற்றப்பத்திரிகையை 13 சாட்சியங்களுடன் உதவி கமிஷனர் ரவி சர்தேசாய் தாக்கல் செய்தார்.






