புனே மாவட்டத்தில் மாடுகளிடம் பரவும் தொற்று நோய்- சந்தைகளை மூட நடவடிக்கை

புனே மாவட்டத்தில் மாடுகளுக்கு தொற்று நோய் பரவுவதால் சந்தைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
புனே,
புனே மாவட்டம் ஜூன்னார் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் மாடுகளுக்கு தோல் கட்டி தொற்று நோய் பரவி வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் புனே நகரத்தில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள மாண்டுவே கிராமத்திற்கு சென்று கால்நடைகளிடம் பரிசோதனை நடத்தினர். இதில் வைரஸ் தொற்று அறிகுறிகள் 7 காளை மாடுகள், ஒரு பசுமாட்டிற்கு இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் இந்த வைரஸ் தொற்று நோயினால் இறப்பு எதுவும் பதிவாகவில்லை என தெரியவந்தது.
இது பற்றி புனே மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி ஆயுஷ் பிரசாத் கூறுகையில், "இந்த தோல் கட்டி நோயை கட்டுப்படுத்த சந்தைகள் மூடல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள மற்ற கிராமங்களுக்கு சென்று மருந்துகள் வழங்கப்படுகிறது. இது பற்றி கால்நடை வளர்ப்பவர்களிடம் சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.






