அந்தேரி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே வேட்பாளருக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு

அந்தேரி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே வேட்பாளருக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதாக அனில் பரப் தெரிவித்தார்.
மும்பை,
அந்தேரி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே வேட்பாளருக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதாக அனில் பரப் தெரிவித்தார்.
புதிய சின்னம்
சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே்கே மறைவை அடுத்து காலியாக உள்ள அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சிவசேனா உத்தவ் தக்கரே தலைமையிலான ஒரு அணியாகவும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மற்றொரு அணியாகவும் பிரிந்து நிற்கும் நிலையில் நடைபெறும் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் ருதுஜா லட்கே களம் இறக்கப்பட உள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் சிவசேனா கட்சி சின்னம் மற்றும் பெயர் இந்த தேர்தலில் முடக்கப்பட்டு உள்ளது. இது அக்கட்சிக்கு கடும் பின்னடைவாக கருதப்பட்டது.
இதனால் சிவசேனா கட்சி புதிய சின்னம் மற்றும் கட்சி பெயருடன் சிவசேனா களம் இறங்குகிறது.
மகா விகாஸ் அகாடி கூட்டணி
இந்த நிலையில் இடைதேர்தலில் உத்தவ் தாக்கரே தரப்பு வேட்பாளருக்கு ஆதரவளிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முன்வந்துள்ளன. இதுகுறித்து முன்னாள் மந்திரி அனில் பரப் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அடுத்த மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ள அந்தேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் மகா விகாஸ் அகாடியின் 3 கட்சிகளும் இணைந்து போட்டியிடும். உத்தவ்தாக்கரே கட்சியின் வேட்பாளர் ருதுஜா லட்கேவை ஆதரிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
கடந்த கால இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா தனது ஆதரவை அளித்துள்ளது. சிவசேனாவை சேர்ந்த ரமேஷ் லட்கே 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அந்தேரியில் வெற்றி பெற்றதால் இந்த தேர்தலில் அவரது மனைவியை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா வேட்பாளர்
அவருடன் மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ராக்கி ஜாதவ் ஆகியோரும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சியின் வெட்பாளராக முர்ஜி படேல் களம் இறக்கப்பட உள்ளதாக தெரிகிறது.






