அந்தேரி கிழக்கு இடைத்தேர்தல்: பா.ஜனதா போட்டியில் இருந்து விலகியதற்கு தோல்வி பயமே காரணம்- தாக்கரே சிவசேனா பரபரப்பு குற்றச்சாட்டு

அந்தேரி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் பா.ஜனதா போட்டியில் இருந்து விலகி உள்ளதாக உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கூறியுள்ளது.
மும்பை,
அந்தேரி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் பா.ஜனதா போட்டியில் இருந்து விலகி உள்ளதாக உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கூறியுள்ளது.
இடைத்தேர்தல்
மும்பையில் உள்ள அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா சார்பில் ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இவருக்கு கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.
இதேபோல பா.ஜனதா சார்பில் முர்ஜி பட்டேல் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவருக்கு முதல்-மந்திரி ஷிண்டேயின் சிவசேனா ஆதரவு அளித்தது.
சிவசேனா உடைந்த பிறகு நடைபெறும் முக்கிய தேர்தல் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பா.ஜனதா திடீர் விலகல்
இதற்கிடையே ருதுஜா லட்கே போட்டியின்றி தேர்வாகும் வகையில் பா.ஜனதா தனது வேட்பாளரை திரும்ப பெற வேண்டும் என நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இடைத்தேர்தலில் திடீர் திருப்பமாக பா.ஜனதா தனது வேட்பாளரை திரும்ப பெற்றது. உயிரிழந்த எம்.எல்.ஏ.வின் மனைவி தேர்தலில் நிற்பதால், மராட்டிய அரசியல் கலாசாரத்தை காக்கவே தேர்தல் போட்டியில் இருந்து விலகியதாக பா.ஜனதா கூறியது.
தோல்வி பயமே காரணம்
இந்தநிலையில் தோல்வி பயம் காரணமாகவே பா.ஜனதா வேட்பாளரை திரும்ப பெற்றதாக உத்தவ் தாக்கரேயின் சிவசேனா தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் 'சாம்னா' பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பா.ஜனதா வேட்பாளரை திரும்ப பெற்றது நாம் பார்ப்பது போல சாதாரணமானது அல்ல. தேர்தலில் தோல்வியை சந்தித்தால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியது வரும் என்பதை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உணர்ந்து உள்ளனர். பா.ஜனதாவும் தேர்தலில் சிவசேனா வெற்றி பெறுவது உறுதி என்பதை உணர்ந்தது.
ஷிண்டே-பாஜனதா கார் அபாயகரமான வளைவில் இருந்தது. அது விபத்தை சந்திக்க இருந்தது. எனவே விபத்தை தவிர்க்க அவர்கள் பிரேக் போட்டு, திரும்பி உள்ளனர். தேர்தல் தோல்வியில் இருந்து தப்பிக்கவும், எங்களது தீப்பந்தம் சின்னம் மூலம் தீக்காயம் ஏற்படாமல் இருக்கவும் பா.ஜனதா எளிதான வழியை (தேர்தலில் போட்டியிடாமல் இருத்தல்) தேர்ந்தெடுத்து இருக்கிறது. ஆனால் இந்த பாதுகாப்பான பாதையை தேர்வு செய்த போதும் கூட பா.ஜனதா அவமானத்தை சந்தித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.






