பள்ளி கழிவறை குறித்த கொள்கையை உருவாக்க நல்ல நாளுக்காக காத்திருக்கிறீர்களா?- மராட்டிய அரசு மீது ஐகோர்ட்டு காட்டம்


பள்ளி கழிவறை குறித்த கொள்கையை உருவாக்க நல்ல நாளுக்காக காத்திருக்கிறீர்களா?- மராட்டிய அரசு மீது ஐகோர்ட்டு காட்டம்
x

சுத்தமான, சுகாதாரமான பள்ளி கழிவறை குறித்த கொள்கையை உருவாக்க நல்ல நாளுக்காக காத்திருக்கிறீர்களா? என அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

மும்பை,

சுத்தமான, சுகாதாரமான பள்ளி கழிவறை குறித்த கொள்கையை உருவாக்க நல்ல நாளுக்காக காத்திருக்கிறீர்களா? என அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

மனு தாக்கல்

மராட்டியத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான கழிவறைகள் சுகாதாரம் இன்றி இருப்பதை சுட்டிக்காட்டி சட்ட மாணவிகளான நிகிதா கோர், வைஷ்ணவி கோலவே ஆகியோர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில் குறிப்பாக பருவ பெண்களின் மிகப்பெரிய பிரச்சினையான மாதவிடாய் சுகாதார மேலாண்மை பிரச்சினையில் மத்திய, மாநில அரசு திறம்பட செயலாற்றாதது குறித்து கவலை எழுப்பப்பட்டு இருந்தது.

அறிக்கை சமர்ப்பிப்பு

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் மும்பை நகர், புறநகர் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மராட்டிய சட்ட சேவை ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு படி ஆணையம் தங்கள் அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் படி, 235 பள்ளிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 207 பள்ளிகளின் கழிப்பறைகளின் தரம் மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பிரசன்னா வரலே மற்றும் ஷர்மிளா தேஷ்முக் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் கூறியதாவது:-

அடுக்கடுக்கான கேள்வி

இந்த அறிக்கை பள்ளிகளில் கழிவறைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

இந்த அறிக்கை மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதியை பற்றியது. நகரங்களிலேயே இந்த நிலை என்றால், கிராமப்புறங்களில் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள், மாநில அரசின் கல்வி அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? இது உங்கள் அரசின் கடமையல்லவா? அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டாமா?

பள்ள கழிவறைகள் தொடர்பான விவகாரத்தில் மாநில அரசு ஏன் ஒரு கொள்கையை உருவாக்கவில்லை. மாநில அரசு இத்தகைய கொள்கையை வகுக்க சக்தியற்றதா? இதை செய்ய நீங்கள் ஏதேனும் ஒரு நல்ல நாளுக்காக காத்திருக்கிறீர்களா?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

விசாரணை ஒத்திவைப்பு

அப்போது அரசு வழக்கறிஞர் பி.பி.சமந்த், இது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.

அப்போது அரசின் கடமை என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழு்பினர்.

மேலும் அவர்கள் கூறுகையில், "மாநில அரசு கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை இதுதானா? இது மிகவும் வருந்தத்தக்க நிலை, இது எங்களுக்கு வேதனை அளிக்கிறது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அறிக்கையை ஆய்வு செய்ய மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, 4 வாரங்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

1 More update

Next Story