பா.ஜனதா, சிவசேனா சார்பில் 'ஆசிர்வாத் யாத்திரை'

மும்பையில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் சாா்பில் ‘ஆசிர்வாத் யாத்திரை' நேற்று தொடங்கியது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்துகொண்டார்.
மும்பை,
மும்பையில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் சாா்பில் 'ஆசிர்வாத் யாத்திரை' நேற்று தொடங்கியது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்துகொண்டார்.
'ஆசிர்வாத் யாத்திரை'
மராட்டிய மாநிலத்தில் கஸ்பா பேத், சிஞ்வாட் தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் நடந்தது. தேர்தலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு கஸ்பா பேத் தொகுதியை பா.ஜனதா காங்கிரசிடம் பறி கொடுத்தது.
இந்தநிலையில் மக்களை சந்திக்க மும்பையில் பா.ஜனதா - சிவசேனா (ஷிண்டே தரப்பு) கட்சிகள் இணைந்து 'ஆசிர்வாத் யாத்திரையை' தொடங்கி உள்ளது.
யாத்திரையின் போது மும்பையில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதி மக்களை பா.ஜனதா, சிவசேனாவினர் சந்திக்கின்றனர். நேற்று முதல் நாள் முல்லுண்டு உள்ளிட்ட பகுதிகளில் மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் தலைமையில் கட்சியினர் பேரணியாக சென்று மக்களை சந்தித்தனர். இந்த யாத்திரையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார்.
ஒரு நாளில் 2 தொகுதி
யாத்திரை தொடர்பாக ஆஷிஸ் செலார் கூறுகையில், "முதல் நாளில் 2 நாடாளுமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தோம். வருகிற 9-ந் தேதி 2 தொகுதிகளிலும், 11-ந் தேதி 2 தொகுதிகளிலும் யாத்திரை மேற்கொள்ள உள்ளோம். யாத்திரையின் போது தலைவர்கள் முக்கியமான கோவில்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வார்கள். மக்களை சந்திப்பார்கள்" என்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மும்பையில் உள்ள 6 தொகுதிகளில் பா.ஜனதா, ஒன்றுப்பட்ட சிவசேனா தலா 3 தொகுதிகளில் வென்று இருந்தது. சிவசேனா எம்.பி.க்களில் ராகுல் செவாலே (தென்மத்திய மும்பை), கஜானன் கிருத்திகர் (வடமேற்கு மும்பை) ஏக்நாத் ஷிண்ட தலைமையிலான சிவசேனாவில் உள்ளனர். தென்மும்பை எம்.பி. அரவிந்த் சாவந்த் உத்தவ் தாக்கரேவுடன் உள்ளார்.






