ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மாணவர் கைது

காதலிக்காக ஆடம்பரமாக செலவு செய்ய ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மாணவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
காதலிக்காக ஆடம்பரமாக செலவு செய்ய ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மாணவரை போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம். எந்திரம் சேதம்
மும்பை கிராண்ட் ரோடு அருகே குவாலியா டேங்க் பகுதியில் அரசுடமை வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி எந்திரம் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக வங்கி மேலாளருக்கு தெரியவந்தது.
இதனால் அங்கு சென்று நடத்திய சோதனையில் டிஜிட்டல் லாக்கர் உடைந்த நிலையில் பணம் இருந்த பெட்டகம் உடையாமல் இருந்தது. இதனால் பணம் கொள்ளை போகாமல் தப்பியது. இது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
மாணவர் சிக்கினார்
இதில் முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் எந்திரத்தை கியாஸ் கட்டர் மற்றும் இரும்பு கம்பியால் உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இருப்பினும் பணத்தை எடுக்க முடியாமல் போனதால் வாலிபர் அங்கிருந்து தப்பி சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வாலிபரை அடையாளம் காண 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் தார்டுதேவ் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான ரித்தேஷ் பாரதி (வயது20) என்பது தெரியவந்தது.
ஆடம்பர செலவு
இதனை தொடர்ந்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். கொள்ளை முயற்சி தொடர்பாக நடத்திய விசாரணையில், தனது காதலிக்கு ஆடம்பர செலவு செய்ய பணம் தேவைப்பட்டுள்ளது.
இதற்காக ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை அடிக்க திட்டம் போட்டு யூ-டியூப் வீடியோவை பார்த்து தொழில்நுட்பத்தை அறிந்தார். இதனை தொடர்ந்து அவர் எந்திரத்தை சேதப்படுத்தி பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக தெரியவந்தது.






