வித்யாவிகார் சொசைட்டி கட்டிடத்தில் கொடூரம்; பெண்ணை மிரட்டி பலாத்காரம் - 2 காவலாளிகள் அதிரடி கைது
வித்யாவிகாரில் உள்ள சொசைட்டி கட்டிடத்தில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த காவலாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
வித்யாவிகாரில் உள்ள சொசைட்டி கட்டிடத்தில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த காவலாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பலாத்காரம்
மும்பை வித்யாவிகார் பகுதியில் உயர்தர சொசைட்டி கட்டிடத்தில் 39 வயது பெண் ஒருவர் தனது கணவர், 5 வயது மகனுடன் வசித்து வருகிறார். இந்த கட்டிடத்தில் பத்லாப்பூரை சேர்ந்த அசோக்குமார் (வயது53) டிட்வாலாவை சேர்ந்த பஞ்சம் சிங் (55) ஆகிய 2 பேர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் காவலாளியாக வேலை பார்த்து வந்தனர். சம்பவத்தன்று சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 2 பேரும் வீட்டிற்கு சென்று நைசாக பேச்சு கொடுத்தனர். நாளடைவில் அவர்கள் பெண்ணிடம் ஆபாசமாக பேசிவந்ததாக தெரிகிறது. அவர்களது பேச்சில் மயங்கிய பெண்ணை 2 பேரும் சேர்ந்து கட்டிடத்தில் உள்ள கிளப்பில் வைத்து பலாத்காரம் செய்தனர். இவ்வாறு 5 தடவை பலாத்காரம் செய்தனர்.
2 காவலாளிகள் கைது
ஒரு கட்டத்தில் அப்பெண் காவலாளிகளின் இச்சைக்கு உடன்பட மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து பெண்ணின் 5 வயது மகனை கடத்தப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் மிரட்டி உள்ளனர். மேலும் கணவரை கொன்று விடுவதாகவும் பெண்ணை மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் சம்பவம் குறித்து கணவரிடம் தெரிவித்தார். இதன்பேரில் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் காவலாளிகள் 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.