'செல்பி' எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் வீரர் பிரித்விஷா கார் மீது தாக்குதல்- சமூகவலைதள பெண் பிரபலம் கைது


செல்பி எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் வீரர் பிரித்விஷா கார் மீது தாக்குதல்- சமூகவலைதள பெண் பிரபலம் கைது
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

‘செல்பி’ எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் வீரர் பிரித்விஷாவின் காரை கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவத்தில் போலீசார் சமூகவலைதள பெண் பிரபலத்தை கைது செய்தனர்.

மும்பை,

'செல்பி' எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் வீரர் பிரித்விஷாவின் காரை கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவத்தில் போலீசார் சமூகவலைதள பெண் பிரபலத்தை கைது செய்தனர்.

செல்பி தகராறு

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்விஷா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மும்பை சாந்தாகுருஸ் விமான நிலையம் அருகில் உள்ள ஓட்டலுக்கு இரவு உணவு சாப்பிட சென்றார். அவருடன் அறை தோழரும், நண்பருமான ஆஷிஸ் யாதவும் சென்றார். ஓட்டலுக்கு 2 பேரும் சென்றபோது, ஒருவர் பிரித்விஷாவுடன் செல்பி எடுக்க விரும்பினார். கிரிக்கெட் வீரரும் அவருடன் செல்பி எடுத்தார்.

ஆனால் அந்த நபர் மீண்டும் மீண்டும் செல்பி எடுத்தார். இது பிரித்விஷாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அவருடன் செல்பி எடுத்த நபர் பிரித்விஷாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை கவனித்த ஓட்டல் மேலாளர் அந்த நபரை வெளியேற்றினார்.

கார் மீது தாக்குதல்

இந்தநிலையில் பிரித்விஷாவும், அவரது நண்பரும் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் ஓட்டலில் இருந்து வெளியே வந்தனர். அப்போது செல்பி எடுக்க தகராறில் ஈடுபட்ட நபர், அவரது நண்பர்களுடன் பேஸ்பால் மட்டையுடன் அங்கு நின்றார். பிரித்விஷாவுடன் அவரது நண்பரும் காரில் ஏறி உட்கார்ந்தார். அப்போது அந்த நபர் பிரித்விஷாவின் கார் கண்ணாடியை பேஸ்பால் மட்டையால் அடித்தார். அப்போது இரு தரப்புக்கும் ஓட்டல் முன் தகராறு ஏற்பட்டது. நிலைமை மோசமானதை உணர்ந்த பிரித்விஷா வேறு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே அவரது நண்பர் பிரித்விஷாவின் காரில் ஒஷிவாரா நோக்கி சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிளிலும், ஒரு காரிலும் பெண் உள்பட 8 பேர் சென்றனர். அவர்கள் அதிகாலை 4 மணியளவில் லிங்ரோடு, பெட்ரோல் பம்ப் அருகில் காரை வழிமறித்தனர். ஒருவர் தாக்கியதில் நண்பர் ஓட்டிச்சென்ற பிரித்விஷாவின் கார் கண்ணாடி நொறுங்கியது.

சமூகவலைதள பெண் பிரபலம் கைது

இதைத்தொடா்ந்து பிரித்விஷாவின் நண்பர் காரை ஒஷிவாரா போலீஸ் நிலையம் நோக்கி ஓட்டினார். அப்போது அவர்கள், பின்தொடர்ந்து வந்து பிரித்விஷாவின் நண்பரை அவதூறாக பேசினர். போலீஸ் நிலையம் வந்தவுடன் காரில் இருந்த பெண் பிாித்விஷாவின் நண்பரிடம் ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டினார். பணம் கொடுக்கவில்லை எனில் போலீசில் பொய் புகார் அளிப்பேன் என மிரட்டினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரித்விஷாவின் நண்பர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய சமூகவலைதள பெண் பிரபலம் சனா என்ற சப்னா கில்லை கைது செய்தனர். பிரித்ஷாவிடம் செல்பி எடுத்து தகராறில் ஈடுபட்ட சோபித் தாக்குர் உள்பட 7 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

1 More update

Next Story