மும்பை மாநகராட்சி அதிகாரி மீது தாக்குதல் - உத்தவ் தாக்கரே கட்சியினர் ஆத்திரம்

மும்பையில் உத்தவ் தாக்கரே கட்சியினர் மாநகராட்சி அதிகாரியை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மும்பையில் உத்தவ் தாக்கரே கட்சியினர் மாநகராட்சி அதிகாரியை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சியை கண்டித்து போராட்டம்
மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது, குடிநீர் வினியோக பிரச்சினை போன்ற விவகாரங்களில் மாநகராட்சியை கண்டித்து நேற்று உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி அனில் பரப் தலைமையில் நடந்த போராட்டத்தில் கட்சியினர் அதிகளவில் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு பிறகு அனில் பரப் உள்பட கட்சியினர் மாநகராட்சி எச்-கிழக்கு வார்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதிகாரி மீது தாக்குதல்
அப்போது திடீரென கட்சியினர் அதிகாரி ஒருவரை தாக்கினர். அருகில் இருந்த மாநகராட்சி காவலர்கள் தொண்டர்களிடம் இருந்து அதிகாரியை மீட்டனர். தாக்கப்பட்ட அதிகாரி மாநகராட்சி உதவி என்ஜினீயர் ஆவார். கட்சியினர் தாக்கியதில் காயமடைந்த அதிகாரி சிகிச்சைக்காக வி.என். தேசாய் ஆஸ்பத்திரியில் சோ்க்கப்பட்டார். முன்னாள் மந்திரி முன்னிலையில் கட்சியினர் மாநகராட்சி அதிகாரியை தாக்கிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதல் ஏன்?
கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் சட்டவிரோத கட்டிடம் என மாநகராட்சியினர் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் அலுவலகத்தை (சாக்கா) இடித்து அகற்றினர். இதனால் மாநகராட்சி மீது ஆத்திரத்தில் இருந்த கட்சியினர் அதிகாரியை தாக்கியதாக கூறப்படுகிறது. அரசியல் காரணங்களுக்காக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா அலுவலகங்களை மாநகராட்சி இடிப்பதாக அந்த கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.






