2-வது மனைவி குடும்பத்தினரை சுட்டுக்கொல்ல முயற்சி- கணவர் மீது வழக்கு


2-வது மனைவி குடும்பத்தினரை சுட்டுக்கொல்ல முயற்சி- கணவர் மீது  வழக்கு
x

குடும்ப தகராறு காரணமாக மனைவி குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற சம்பவத்தில் கையில் காயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பை,

குடும்ப தகராறு காரணமாக மனைவி குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற சம்பவத்தில் கையில் காயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாக்குவாதம்

ராய்காட் மாவட்டம் கர்ஜத் பகுதியை சேர்ந்தவர் அயூதீன் கான் (வயது32). இவரது 2-வது மனைவி மும்பை தாராவி பி.எம்.ஜி காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப செலவிற்காக ரூ.40 ஆயிரம் மனைவிக்கு கொடுத்து இருந்தார். ஆனால் மீண்டும் பணம் கேட்டு அவர் தொந்தரவு செய்ததால் கர்ஜத்தில் இருந்து மும்பை தாராவிக்கு அயூதீன் கான் வந்தார். அங்கு கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் வீட்டை விட்டு வெளியே வந்த அயூதீன் கான் இரண்டாவது மனைவி உள்பட அவரது குடும்பத்தினரை திட்டி உள்ளார்.

துப்பாக்கியால் சுட்டார்

பின்னர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கு நின்றிருந்த மாமியார் மற்றும் மைத்துனரை நோக்கி சரமாரியாக சுட்டார். ஆனால் தோட்டாக்கள் குறி தவறியதில் அயூதீன் கான் கையில் படுகாயம் ஏற்பட்டது. இதைத்தொடந்து அவர் அங்கிருந்து தப்பி சென்றார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் தாராவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு துப்பாக்கியில் இருந்து வெளியேறிய தோட்டாக்கள் சிதறி கிடந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

போலீசார் அயூதீன் கானை பிடிக்க நடத்திய விசாரணையில், கையில் காயத்துடன் அவர் சயான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

சிகிச்சைக்கு பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மனைவி குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற சம்பவம் தாராவியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story