பெண்கள் ஆடை குறித்து சர்ச்சை பேச்சு- பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டார்


பெண்கள் ஆடை குறித்து சர்ச்சை பேச்சு- பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டார்
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் ஆடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மும்பை,

பெண்கள் ஆடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சர்ச்சை பேச்சு

மும்பையை அடுத்த தானேயில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் நிறுவனம் சார்பில் பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் யோகா குரு பாபா ராம்தேவ், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி., துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பெண்களின் ஆடை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மராட்டிய மாநில பெண்கள் ஆணையம் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதில் 3 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

மன்னிப்பு கேட்டார்

இந்தநிலையில் பாபா ராம்தேவ் அந்த நோட்டீசுக்கு பதில் அளித்து மாநில பெண்கள் ஆணைய தலைவர் ரூபாலி சகான்கருக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் மராட்டிய பெண்கள் ஆணையத்தின் விதி எதையும் மீறவில்லை. உலக அளவில் பெண்களின் மரியாதைக்கும், சம உரிமைக்காகவும் பிரசாரம் செய்து வருகிறேன். அரசின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்' போன்ற திட்டங்களுக்கு ஆதரவு அளித்து அதை ஊக்கப்படுத்தி வருகிறேன். இந்த திட்டங்களை பலப்படுத்த பல அமைப்புகளுடன் பணியாற்றி வருகிறேன். நான் எந்த ஒரு பெண்ணையும் இழிவுப்படுத்தவில்லை. அந்த நோக்கத்துடனும் எதையும் செய்யவில்லை.

தானேயில் நடந்த நிகழ்ச்சி பெண்களுக்காக நடத்தப்பட்டது. எனது ஒரு மணி நேர பேச்சை திரித்து தவறான நோக்கத்துடன் சில வினாடி வீடியோவாக வெளியிட்டுள்ளனர். தாய் மற்றும் தாய் சக்தி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. நான் சாதாரணமாக ஆடை குறித்து தான் பேசினேன். அது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மிகுந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். யாருக்கும் வேதனையை அளித்து இருந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story