எல்கர் பரிசத் வழக்கில் ஜாமீன்: 2 சமூக ஆர்வலர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆவதில் தாமதம்

புனே எல்கர் பரிசத் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட 2 சமூக ஆர்வலர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆவதில் தாமதம்
மும்பை,
புனேயில் பீமா-கோரேகாவில் நடந்த வன்முறை தொடர்பான எல்கர் பரிசத் வழக்கில் சமூக ஆர்வலர்களான வெர்னான் கோன்சால்வே, அருண் பெரிரா ஆகியோர் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் நீண்டகாலமாக சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டி சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டு நீதிபதி ராஜேஷ் கட்டாரியா, இருவரும் ரொக்க ஜாமீனில் விடுவிக்க வலியுறுத்திய மனுக்களை நிராகரித்தார். ரூ.50 ஆயிரத்திற்கு தனிநபர் உத்தரவாதம் மற்றும் 2 ஜாமீன் தொகைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த தனிநபர் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்யும் செயல்முறை அதிக நேரம் எடுக்க கூடியதாகும். அதனால் அவர்கள் விடுதலை மேலும் தள்ளி போகலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் அவர்களின் வக்கீல் ஒருவர், "வருகிற வெள்ளிக்கிழமைக்குள் விடுதலைக்குரிய நடைமுறைகளை முடிக்க முயற்சிப்போம்" என்றார்.






