மராட்டியத்தில் 'பைக்' டாக்சிகளுக்கு தடை- அரசு அதிரடி உத்தரவு

மராட்டியத்தில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
பைக் டாக்சிகள்
நாட்டின் பல்வேறு நகரங்களில் புற்றீசல் போல பைக் டாக்சிகள் பெருகி உள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயலியில் தொடர்பு கொண்டால், இருசக்கர வாகனம் பயணி முன்பு வந்து நிற்கும். அந்த இருசக்கர வாகன ஓட்டி பயணிகளை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிட்டு கட்டணத்தை வசூலித்து செல்வார். இதுவே பைக் டாக்சி என்று அழைக்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவில் விரும்புகிற இடத்துக்கு செல்ல முடியும், ஆட்டோ மற்றும் டாக்சியை விட கட்டணம் குறைவு என்பதால் பைக் டாக்சிகளுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது.
ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்
மராட்டியத்தில் மும்பை, புனே போன்ற பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புனேயில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்துக்கு புனேயில் பைக் டாக்சி சேவையை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. ரேபிடோ நிறுவனம் பைக் டாக்சி சேவைக்கு உரிமம் வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. ஆனால் பைக் டாக்சி சேவையை தற்காலிகமாக நிறுத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பைக் டாக்சிகளுக்கு தடை
இந்தநிலையில் மராட்டிய அரசு திடீரென பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்து உள்ளது. அதில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் உரிய உரிமம் பெற்று இயக்கப்படும் இதர போக்குவரத்து வாகனங்களுக்கு பைக் டாக்சிகள் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து பிறப்பித்த அரசாணையை நேற்று மாநில அரசு மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. இதையடுத்து பைக் டாக்சி உரிமம் கேட்டு ரேபிடோ நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.






