16, 17-ந் தேதிகளில் ஜி-20 கூட்டம்:- புனே நகரை அழகுப்படுத்தும் பணிகள் தீவிரம்

ஜி-20 கூட்டத்தை ஒட்டி புனே நகரை அழகுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் பார்வையிட்டார்.
புனே,
ஜி-20 கூட்டத்தை ஒட்டி புனே நகரை அழகுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் பார்வையிட்டார்.
34 நாடு பிரதிநிதிகள்
"ஜி-20' என்னும் அமைப்பில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்தது.
இதன்பின்பு, ஜி-20 மாநாட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை பிரதமர் மோடி ஏற்று கொண்டார். இந்தநிலையில் வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் புனேயில் ஜி-20 மாநாடு தொடர்புடைய கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் 34 நாடுகளை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்த கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல வாய்ப்பு
இதற்காக புனேயில் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக புனே நகரின் சாலைகள் மறுசீரமைப்பு செய்து அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியை புனே மாவட்ட பொறுப்பு மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
புனேவின் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சியை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்வு நகரில் உள்ள நல்ல விஷயங்களை உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டும்.
வெளிநாட்டு பிரதிநிதிகளின் செல்லும் வழிகளில் உள்ள தங்கள் கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை விளக்குகளால் அலங்கரிக்கும்படி கடைக்காரர்கள் மற்றும் குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுகிறேன். பாதுகாப்பு வரையறைகளுக்கு உட்பட்டு குடிமக்கள் மூவர்ண கொடிகளை அசைத்தும் பிரதிநிதிகளை வரவேற்கலாம்.
சுருக்கமாக சொல்வதானால், நம் வீட்டிற்கு விருந்தினர் வருவதை போல நினைத்துக்கொள்ளுங்கள். வருபவர்கள் அற்புதமான விருந்தோம்பல் நினைவுகளுடன் நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டருக்கு அறிவுறுத்தல்
புனே மாநகராட்சி மற்றும் கலெக்டர் அவலுவலம் போன்ற நிர்வாக வளாகங்களுக்கு வெளியே சிலர் போராட்டம் நடத்துவது குறித்து பேசிய அவர், " ஜி-20 கூட்டம் நடைபெறும்போது இதுபோன்ற விஷயங்களை வெளிகாட்டுவது நல்லது அல்ல என்பதால், இருகரம் கூப்பி போராட்டக்காரர்களிடம் போராட்டத்தை நிறுத்த வலியுறுத்துமாறு கலெக்டருக்கு அறிவுறுத்தி உள்ளேன்" என்றார்.






