'பைக் டாக்சி' அனுமதி கொள்கை விவகாரம்: மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்

பைக் டாக்சி அனுமதி கொள்கை தொடர்பான விவகாரத்தில் மராட்டிய அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது.
மும்பை,
பைக் டாக்சி அனுமதி கொள்கை தொடர்பான விவகாரத்தில் மராட்டிய அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது.
பைக் டாக்சி சேவை
மும்பை, புனே நகரங்களில் ரேபிடோ நிறுவனம் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகிறது. கடந்த மாதம் 29-ந் தேதி பைக் டாக்சி சேவைக்கு அனுமதி கிடையாது என மாநில அரசு கூறியது. இதை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் கவுதம் பட்டேல், எஸ்.ஜி. திகே அடங்கிய அமர்வு முன் நடந்தது.
அப்போது மாநில அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரேந்திர சரப் ஆஜரானார். அவர், "பைக் டாக்சிகளை அனுமதிப்பது தொடர்பாக அரசு கொள்கை அல்லது வழிகாட்டுதலை வெளியிடவில்லை என்பதால் இன்று வரை பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உரிமம் இன்றி பைக் டாக்சி சேவையை இயக்கிய நிறுவனத்துக்கு அரசு நோட்டீசு அனுப்பி உள்ளது. பைக் டாக்சிகளை இயக்க உரிமம் தேவை" என்றார்.
அரசுக்கு கண்டனம்
நீதிபதிகள் பைக் டாக்சி சேவை தொடர்பாக கொள்கையை உருவாக்காமல் உள்ள அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி நீதிபதிகள், "அரசு கொள்கையை உருவாக்கும் வரை பைக் டாக்சிகளை இயக்க முடியாது, அப்படி இருக்கையில் அரசின் தற்போதைய நிலைப்பாட்டை ஏற்பது கடினமாக உள்ளது. பைக் டாக்சி தொடர்பான கொள்கை எப்போது வகுக்கப்படும் என்பது கூட தெளிவுப்படுத்தப்படவில்லை.
நீங்கள் எப்படி தேவைப்படுகிற ஒரு கொள்கை அல்லது வழிகாட்டுதலை மறுக்க முடியும்?. எந்த காரணத்தை கூறியும் நீங்கள் பைக் டாக்சி உரிமத்தை மறுக்க முடியும். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருக்க கூடாது. தற்காலிகமானதாக இருந்தால் கூட இந்த விவகாரத்தில் நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். அரசின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளவே எங்களுக்கு கடினமாக உள்ளது" என்றனர்.
இதையடுத்து மனு மீதான விசாரணை வரும் 13-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.






