கருப்பு மை எச்சரிக்கையால் போர் வெற்றி தினத்தில் பங்கேற்காத பா.ஜனதா மந்திரி


கருப்பு மை எச்சரிக்கையால் போர் வெற்றி தினத்தில் பங்கேற்காத பா.ஜனதா மந்திரி
x
தினத்தந்தி 2 Jan 2023 12:30 AM IST (Updated: 2 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கருப்பு மை வீசப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததை அடுத்து பா.ஜனதா மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் புனேயில் நடந்த போர் வெற்றி தினத்தில் பங்கேற்கவில்லை.

புனே,

கருப்பு மை வீசப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததை அடுத்து பா.ஜனதா மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் புனேயில் நடந்த போர் வெற்றி தினத்தில் பங்கேற்கவில்லை.

போர் வெற்றி தினம்

ஆங்கிலேயர்கள் கடந்த 1818-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி புனே மாவட்டம் பீமா கோரேகாவ் பகுதியில் நடந்த போரில் பேஷ்வாக்களை தோற்கடித்தனர். போரில் ஆங்கிலேயர் படையில் மகர் சமுதாயத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகளவில் இருந்தனர். எனவே அவர்கள் பேஷ்வாக்களுக்கு எதிரான போர் வெற்றியை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த 200-வது ஆண்டு போர் வெற்றி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்தது.

எல்கர் பரிஷத் மாநாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியது தான் பீமாகோரேகாவ் வன்முறைக்கு காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று 205-வது போர் வெற்றி தினம் அனுசரிக்கப்பட்டது. வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், உத்தவ் பாலாசாகேப் சிவசேனா செய்தி தொடர்பாளர் சுஷ்மா அந்தாரே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் புனே பெர்னே கிராமத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட போர் வெற்றி தூணில் மரியாதை செலுத்தினர்.

பா.ஜனதா மந்திரி பங்கேற்கவில்லை

போர் வெற்றி தினத்தில் பா.ஜனதாவை சேர்ந்த புனே மாவட்ட பொறுப்பு மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் பங்கேற்கவில்லை. போர் வெற்றி தினத்தில் கலந்து கொண்டால் அவர் மீது கருப்பு மை வீசப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

எனவே அவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த மாதம் புனேயில் அவர் மீது கருப்பு மை வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story