கொரோனா தொற்று காலத்தில் சொகுசு ஓட்டலில் தங்குவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.35 கோடி செலவு- பா.ஜனதா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

கொரோனா காலத்தில் சொகுசு ஓட்டலில் தங்குவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.35 கோடி செலவிட்டதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை,
கொரோனா காலத்தில் சொகுசு ஓட்டலில் தங்குவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.35 கோடி செலவிட்டதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
எம்.எல்.ஏ. கடிதம்
மும்பை மாநகராட்சியை உத்தவ் பாலாசாகேப் சிவசேனா தன் வசம் வைத்திருந்தது. இந்தியாவின் நிதி தலைநகரம் என வர்ணிக்கப்படும் மும்பை மாநகராட்சியின் ஆட்சிகாலம் முடிந்துவிட்டது.
மும்பை மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சியில் அதிகாரம் செலுத்தி வந்த சிவசேனா மீது பல்வேறு புகார்களை பா.ஜனதா முன்வைத்துள்ளது. இந்த நிலையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு, பா.ஜனதா எம்.எல்.ஏ. மிகிர் கோடோச்சா எழுதிய கடிதத்தில், " கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை கொரோனா காலகட்டத்தில் மட்டும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் 5 நட்சத்திர சொகுசு ஓட்டலில் தங்க ரூ.35 கோடியை செலவிட்டுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
அதிகாரிகள் மனநிலை
அதிகாரிகளை 5 நட்சத்திர ஓட்டல்களின் தங்கவைக்க ரூ.34.6 கோடி செலவிடப்பட்டு இருப்பது, சாதாரண மக்களின் நிலையை பற்றி சிறிதும் கவலைப்படாத அவர்களின் மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
அதேநேரம் தொற்றுநோய் வேகமாக பரவியபோது முக்கிய பணிகளை மேற்கொண்ட செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், டாக்டர்கள் போன்றவர்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை சரியான நேரத்தில் மாநகராட்சி கொடுக்கவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகள் மாநகராட்சியை மோசமாக்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தணிக்கை அதிகாரி விசாரணை
மகா விகாஸ் அகாடி அரசு ஆட்சியில் இருந்தபோது தொற்றுநோய் காலத்தில் மும்பை மாநகராட்சி மேற்கொண்ட பணிகள் குறித்து தலைமை தணிக்கை அதிகாரி விசாரணை நடத்த முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு கடந்த 31-ந் தேதி உத்தரவிட்டு இருந்தது.
இதுகுறித்த தலைமை தணிக்கை அதிகாரி கடந்த மாதம் விசாரணையை தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.






