பாகிஸ்தான் மந்திரி கொடும்பாவியை எரித்த பா.ஜனதா எம்.பி.க்கு தீக்காயம்

மும்பை,
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடி பற்றி அவதூறு கருத்துகளை பேசியிருந்தார். அவரை கண்டித்து நேற்று முன்தினம் தேசிய அளவில் பா.ஜனதா போராட்டம் நடத்தியது. மராட்டிய மாநிலம் நாந்தெட்டில் நடந்த போராட்டத்தில் பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிக்லிகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், அவர்கள் பிலாவல் பூட்டோ கொடும்பாவியை எரிக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பிரதாப் சிக்லிகர் எம்.பி.யின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. கொடும்பாவியை எம்.பி. தீக்குச்சியால் கொளுத்த முயன்ற போது, திடீரென பிடித்த தீயால் அவரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மேலும் தீ பரவாமல் தடுத்தனர் என தொண்டர் ஒருவர் கூறினார்.
போராட்டத்தின் போது எம்.பி.யின் கையில் தீக்காயம் ஏற்பட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






