நகைக்கடையில் ரூ.2½ கோடி வைர கம்மல்களை திருடிய வெளிநாட்டு வாழ் இந்திய குடும்பத்தின் காப்பாளர் கைது

நகைக்கடையில் ரூ.2½ கோடி வைர கம்மல்களை திருடிய வெளிநாட்டு வாழ் இந்திய குடும்பத்தின் காப்பாளர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
நகைக்கடையில் ரூ.2½ கோடி வைர கம்மல்களை திருடிய வெளிநாட்டு வாழ் இந்திய குடும்பத்தின் காப்பாளர் கைது செய்யப்பட்டார்.
வைர கம்மல்கள் மாயம்
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள நகைக்கடைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 3 பேர் வந்தனர். அவர்கள் வைர நகைகள் பிரிவில் புதிய மாடல்களை பார்த்தனர். ஆனால் நகை எதுவும் வாங்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் சென்ற பிறகு கடையில் ரூ.2½ கோடி மதிப்பிலான 12 ஜோடி வைர கம்மல்கள் மாயமாகி இருப்பதை ஊழியர் பார்த்தார்.
இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடை, கடைக்கு வெளியே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
காப்பாளர் கைது
அப்போது நகைகடைக்கு வந்தவர்கள் இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்திய குடும்பத்தினர் என்பது தெரியவந்தது. கடைக்கு வெளிநாட்டு வாழ் இந்திய குடும்பத்தை சேர்ந்த 77 வயது தாய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரின் 47 வயது மகன் மற்றும் அவர்களின் 19 வயது காப்பாளர் பிரிஜேஸ் பாரய்யாவும் வந்து உள்ளனர். இதில் காப்பாளர் வைர நகைகளை திருடியதும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வீட்டுக்கு சென்று காப்பாளரை கைது செய்தனர். அவர் வெளிநாட்டு வாழ் இந்தியர் வீட்டை சேர்ந்த 77 வயது தாய், அவரது மகனை பார்த்து கொள்ள இங்கிலாந்து அரசிடம் இருந்து ரூ.1.3 லட்சம் சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வைர திருட்டில் வெளிநாட்டு வாழ் இந்திய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






