தடுப்பூசி போட்டதில் மாணவி பலியானதாக சீரம் நிறுவனத்திடம் ரூ.1000 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு

தடுப்பூசி போட்டதில் மாணவி பலியானதாக சீரம் நிறுவனத்திடம் ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மும்பை,
தடுப்பூசி போட்டதில் மாணவி பலியானதாக சீரம் நிறுவனத்திடம் ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாணவி மரணம்
நாசிக் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவி சினேகல். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி உயிரிழந்தார். இவரது சாவுக்கு கொரோனா தடுப்பூசி போட்டது தான் எனக்கூறி அவரது தந்தை மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் அவர், "எனது மகளுக்கு கல்லூரியில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. சில நாட்களில் தீவிர தலைவலி, வாந்தியால் பாதிக்கப்பட்டாள்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாக டாக்டர்கள் கூறினர். பின்னர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தாள்.
இழப்பீடு தர உத்தரவிட வேண்டும்
தடுப்பூசி போட்டதன் பக்க விளைவால் தான் அவள் உயரிழந்து உள்ளாள். எனவே கோவிஷீல்டு மருந்து தயாரித்த சீரம் நிறுவனம் ரூ.1,000 கோடி இழப்பீடு தர உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கங்காபுர்வாலா மற்றும் மாதவ் ஜாம்தார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது பதிலளிக்குமாறு சீரம் நிறுவனம், மத்திய மற்றும் மராட்டிய அரசுகள், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.






