முதல்-மந்திரி ஷிண்டே அணியில் மந்திரி பதவி வழங்க முடியாத எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி

ஏக்நாத் ஷிண்டே அணி எம்.எல்.ஏ.க்களில் மந்திரி பதவி வழங்க முடியாதவர்களுக்கு வாரிய தலைவர் பதவியை வழங்கி சமாதானப்படுத்த திட்டமிடப்ப்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மும்பை,
ஏக்நாத் ஷிண்டே அணி எம்.எல்.ஏ.க்களில் மந்திரி பதவி வழங்க முடியாதவர்களுக்கு வாரிய தலைவர் பதவியை வழங்கி சமாதானப்படுத்த திட்டமிடப்ப்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மந்திரி பதவி
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 40 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் மந்திரி பதவி ஆசையில் ஷிண்டே அணிக்கு வந்தவர்கள் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்று 2 மாதங்கள் வரை மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது.
எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது பா.ஜனதா, ஷிண்டே அணியை சேர்ந்த தலா 9 பேர் கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
தொடர் தாமதம்
இருப்பினும் இன்னும் முழு மந்திரி சபை அமையவில்லை. எல்லோரும் மந்திரி பதவி கேட்பதால் மந்திரி சபை விரிவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே அணியில் மந்திரி பதவி கொடுக்க முடியாத எம்.எல்.ஏ.க்களுக்கு மாநில வாரிய, கழகங்களில் தலைவர் பதவி வழங்கி சமாதானப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
32 பேர் காத்திருப்பு
இதுதொடர்பாக ஷிண்டே அணியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. எங்களிடம் 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 9 பேர் மந்திரியாகி விட்டனர். மீதம் 32 பேர் காத்து இருக்கிறாா்கள். இதில் 14 பேராவது மந்திரி சபையில் இணைக்கப்பட வேண்டும். இதுதவிர சிறிய கட்சிகள், சுயேச்சைகளும் எங்களுடன் உள்ளனர். அவர்களையும் நாங்கள் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பில்லை. எனவே மாநில வாரியங்களுக்கான பதவிகள் நிரப்படலாம். மாநிலத்தில் 79 வாரியங்கள், கழகங்கள் உள்ளன" என்றார்.






