மும்பையில் 4 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


மும்பையில் 4 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x

மும்பையில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

மும்பையில் மழை

மும்பையில் கடந்த ஜூன் மாதம் பருவ மழைக்காலம் தொடங்கியது. இதில் ஜூலை மாதத்தின் முதல் 2 வாரத்தில் மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழை காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது. இதேபோல நகரில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.

இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாக மும்பையில் மழை இல்லை. ஒருசில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்ந்தது. இந்தநிலையில் நேற்று நகரில் பலத்த மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக தாழ்வான சாலைகளில் வெள்ளம் தேங்கியது. மும்பை தவிர தானே, நவிமும்பை, டோம்பிவிலி, ராய்காட் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது.

4 நாட்களுக்கு எச்சரிக்கை

இந்தநிலையில் மும்பையில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதில் நாளை (திங்கட்கிழமை) முதல் புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பால்கர், தானே, ராய்காட் மாவட்டங்களுக்கும் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராய்காட் மாவட்டத்துக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story