மத்திய, மேற்கு வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மத்திய, மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மத்திய, மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேற்கு ரெயில்வே
மும்பை மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சர்ச்கேட்-மும்பை சென்ட்ரல் இடையே தண்டவாளம், சிக்னல், உயர்மின்அழுத்த கம்பிகள் போன்றவற்றில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் இன்று (ஞாயிற்றுகிழமை) சர்ச்கேட்- மும்பை சென்ட்ரல் இடையே ஸ்லோ வழித்தடத்தின் இரு பாதைகளில் காலை 10.35 மணி முதல் மதியம் 3.35 மணி அளவில் சுமார் 5 மணி நேரம் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக ஸ்லோ வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் விரைவு வழித்தடத்திற்கு மாற்றப்படும். சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மேற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய ரெயில்வே
இதே போல மத்திய ரெயில்வே சார்பில் மாட்டுங்கா-முல்லுண்ட் இடையே விரைவு வழித்தடத்தில் வழக்கமான பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் காலை 11.05 மணி அளவில் தொடங்கி மாலை 3.55 மணி அளவில் நடப்பதால் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி-சுன்னாப்பட்டி மற்றும் பாந்திரா செல்லும் தண்டவாளத்தில் காலை 11.40 மணி முதல் மாலை 4.40 மணி வரையில் நடக்கிறது. இதன்காரணமாக சி.எஸ்.எம்.டி ரெயில் நிலையத்தில் இருந்து பன்வெல் நோக்கி செல்லும் மின்சார ரெயில்கள் காலை 9.53 மணி முதல் மாலை 3.20 மணி வரையில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.






