அவுரங்காபாத், உஸ்மனாபாத் மாவட்டங்களின் பெயர்கள் மாற்றம்; அரசாணை வெளியீடு
அவுரங்காபாத், உஸ்மனாபாத் மாவட்டங்களின் பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மும்பை,
அவுரங்காபாத், உஸ்மனாபாத் மாவட்டங்களின் பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பெயர் மாற்ற முடிவு
முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய மகா விகாஸ் அகாடி அரசு கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 22-ந் தேதி நடத்திய மந்திரி சபை கூட்டத்தில் அவுரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் பெயர்களை மாற்ற முடிவு செய்தது. இருப்பினும் ஒரு நாள் கழித்து பதவியேற்ற முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு இந்த பெயர் மாற்றுவதற்கான உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் முடிவு சட்டவிரோதமானது. ஏனெனில் கவர்னர் பெரும்பான்மையை நிரூபிக்க கூறிய பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று கூறி பெயர் மாற்றத்தை நிறுத்தி வைத்தனர்.
அரசாணை வெளியீடு
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்-மந்திரி ஷிண்டே தலைமையிலான அரசு அவுரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் நகரங்களின் பெயரை முறையே சத்ரபதி சாம்பாஜிநகர் மற்றும் தாராஷிவ் என மாற்றினர். இந்தநிலையில் மராட்டிய அரசு அவுரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் மாவட்டங்களின் பெயர்களை சத்ரபதி சம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என பெயர் மாற்றுவதற்காக அரசாணையை வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு வருவாய் துறை இது குறித்து வெளியிட்ட அரசாணையில், "துணை கோட்டம், கிராமம், தாலுகா மற்றும் மாவட்ட அளவில் பெயர் மாற்றம் செய்ய சில மாதங்களுக்கு முன்பு கோரப்பட்ட ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்து பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டு உள்ளது.