மும்பை- புனே விரைவு சாலையில் ரசாயன டேங்கர் லாரி தீ பிடித்து 4 பேர் பலி

மும்பை- புனே விரைவு சாலையில் ரசாயனம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்த பயங்கர விபத்தில் பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
புனே,
மும்பை- புனே விரைவு சாலையில் ரசாயனம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்த பயங்கர விபத்தில் பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ரசாயன டேங்கரில் தீ
மராட்டியத்தில் மும்பை- புனே விரைவு சாலையில் நேற்று காலை மெத்தனால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. லாரி லோனாவாலா-கண்டாலா இடையே மேம்பாலத்தில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. லாரி கவிழ்ந்தவுடன் அதில் இருந்த ரசாயனம் வெளியே கொட்டி தீப்பிடித்தது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் லாரியில் இருந்த ரசாயனம் கீழே உள்ள சாலையிலும் கொட்டி அங்கும் தீப்பிடித்தது.
பெண் உள்பட 4 பேர் பலி
இந்த பயங்கர விபத்தில் லாரியில் இருந்த ஒருவர் மற்றும் கீழே உள்ள சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டு இருந்த பெண் உள்பட 3 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி டேங்கரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மீட்பு பணியில் ஐ.என்.எஸ். சிவாஜி கடற்படையினரும் ஈடுபட்டனர். விபத்து காரணமாக அந்த பகுதியே புகை மண்டலமானது.
விபத்து குறித்து லோனாவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் மும்பை- புனே சாலையில் 4 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
நீண்ட நேரமாக சாலையில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகளுக்கு அருகில் உள்ள கிராம மக்கள் குடிநீர், உணவு கொடுத்து உதவி செய்தனர்.
டேங்கர் லாரி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர், "டேங்கர் லாரி தீ விபத்து துரதிருஷ்டவசமானது. விபத்தில் காயமடைந்த 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்" என்றார்.






