தட்டம்மையால் குழந்தைகள் பலி: மத்திய குழு மும்பை வருகை

தட்டம்மையால் குழந்தைகள் பலியானதை அடுத்த மத்திய குழு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மும்பை,
தட்டம்மையால் குழந்தைகள் பலியானதை அடுத்த மத்திய குழு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தட்டம்மை நோய் பரவல்
மும்பை கோவண்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் 3 குழந்தைகள் மர்ம நோய்க்கு உயிரிழந்தன. அந்த குழந்தைகள் தட்டம்மை நோய்க்கு பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதேபோல இந்த ஆண்டில் இதுவரை நகரில் 90 பேர் தட்டமையால் பாதிக்கப்பட்டுள்ளர். கடந்த ஜனவரி முதல் மும்பை எப்-வடக்கு, எச்-கிழக்கு, எல், எம்.-கிழக்கு மற்றும் பி-தெற்கு வார்டுகளில் தட்டம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், கோவண்டி பகுதியில் மட்டும் 23 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மங்கலா கோமரே கூறினார்.
இதற்கிடையே மும்பை மாநகராட்சி சின்ச்போக்லியில் உள்ள கஸ்துர்பா ஆஸ்பத்திரியில் தட்டம்மை நோய்க்கு சிறப்பு வார்டு அமைத்து உள்ளது. அதில் தற்போது சுமார் 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய குழு
இந்தநிலையில் தட்டம்மை நோய் பரவல் குறித்து ஆய்வு செய்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்க 3 பேர் அடங்கிய மத்திய குழு மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நோய் பரவல் ஆய்வு திட்ட துணை இயக்குனர் டாக்டர் அனுபவ் ஸ்ரீவஸ்தவா மும்பை அனுப்பப்பட்ட மத்திய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த குழுவில் நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம், புது டெல்லி லேடி ஹர்திங்கே மருத்துவ கல்லூரி, புனே குடும்ப மற்றும் சுகாதார நல மண்டல அலுவலக அதிகாரிகள் இடம் பெற்று உள்ளனர். இந்த குழுவினர் நோய் பரவல் குறித்து களத்துக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர். பின்னர் நோய் பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத்துறைக்கு உதவி செய்ய உள்ளனர்.






