மகள் திருமண நாளிலும் கடமையாற்றிய மும்பை போலீஸ் கமிஷனர்

மகள் திருமண நாளிலும் மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் பணிக்கு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
மகள் திருமண நாளிலும் மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் பணிக்கு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகள் திருமண நாளிலும் பணி
போலீஸ்காரர்கள் என்றால் 24 மணி நேரமும் வேலையில் தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. நள்ளிரவு நேரம் என்றாலும் கூட வேலை இருந்தால் அவர்கள் கடமையாற்றி தான் ஆக வேண்டும். இதனால் அவர்கள் முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதில்லை என்ற கவலை போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்கள், பிள்ளைகளிடம் உள்ளது.
அந்த வகையில் மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் பெற்ற மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல், மகாவிகாஸ் அகாடி கூட்டணி போராட்டத்துக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தகவல் தெரியவந்தது.
பாராட்டு
நேற்று மும்பையில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் சார்பில் மாநில அரசை கண்டித்தும், கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் பிரமாண்ட பேரணி நடந்தது. இந்த பேரணியில் சுமார் 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று தான் மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கரின் மகள் திருமண நிகழ்ச்சியும் நடந்து உள்ளது. ஆனால் அவர் மகளின் திருமண நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போராட்டத்துக்கான பாதுகாப்பு பணியை கவனிக்க விடுமுறை எடுக்காமல் இருந்து இருக்கிறார். காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 2 மணியளவில் தான் முடிந்தது. அதன்பிறகு அவர் மகளின் திருமணத்தில் தந்தைக்கான கடமையை செய்து இருக்கிறார்.
பொதுவாக தந்தைக்கு மகளின் திருமணம் உணர்வு பூர்வமான ஒன்றாகும். பிறந்தது முதல் தன்னுடன் இருந்த மகள் வேறு வீட்டுக்கு செல்லும் நிகழ்வு தந்தையர்களுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில், மும்பை போலீஸ் கமிஷனர் மகள் திருமண நாள் அன்று கூட பணியில் இருந்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.






