தென்மும்பை கிராஸ் மைதானத்தில் 'காலா கோடா' கலைத்திருவிழா- நிபந்தனையுடன் ஐகோர்ட்டு அனுமதி

தென்மும்பையில் உள்ள கிராஸ் மைதானத்தில் காலாகோடா கலைத்திருவிழா நடத்த நிபந்தனையுடன் கூடிய அனுமதியை ஐகோர்ட்டு வழங்கியது.
மும்பை,
தென்மும்பையில் உள்ள கிராஸ் மைதானத்தில் காலாகோடா கலைத்திருவிழா நடத்த நிபந்தனையுடன் கூடிய அனுமதியை ஐகோர்ட்டு வழங்கியது.
காலா கோடா திருவிழா
தென்மும்பையில் நடைபெறும் காலாகோடா திருவிழா புகழ் பெற்றது. இந்த திருவிழாவில் கலைஞர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்துவார்கள்.
இந்த ஆண்டு காலாகோடா திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை தென்மும்பையில் உள்ள காலா கோடா மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கிராஸ் மைதானத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகளை தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்று பொதுநலன் வழக்கு ஒன்றில் கடந்த 2017-ம் ஆண்டு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மும்பை ஐகோர்ட்டில் அனுமதி கோரி மனு செய்தனர்.
நிபந்தனையுடன் அனுமதி
இந்த மனு நேற்று நீதிபதிகள் ஆர்.டி. தனுகா, எம்.எம்.சதாயே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கிராஸ் மைதானத்தில் காலா கோடா திருவிழா நடத்த அனுமதியை வழங்கினர்.
ஆனால் கலைத்திருவிழா நடைபெறும் மைதானத்தில் வர்த்தக கடைகள் மற்றும் உணவு கடைகள் நடத்த அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர். அதன்படி நடப்பதாக விழா அமைப்பாளர்கள் உறுதி அளித்தனர்.






