தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட இருந்த பிரமாண பத்திரங்கள் பறிமுதல்- போலியா? என போலீஸ் விசாரணை

உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட இருந்த பிரமாண பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவை போலியா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட இருந்த பிரமாண பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவை போலியா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரமாண பத்திரங்கள் பறிமுதல்
பாந்திரா கோர்ட்டில் 2 பேர் அதிகளவு பிரமாண பத்திரங்களுக்கு நோட்டரி சீல், ஸ்டாம்ப் அடித்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 4 ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரங்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவை உத்தவ் தாக்கரே அணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய தயார் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்கள் என்பது தெரியவந்தது.
வழக்குப்பதிவு
விதிகளின்படி பிரமாண பத்திரங்களில் நோட்டரி பெற சம்மந்தப்பட்ட நபர் நேரடியாக வர வேண்டும். ஆனால் வெறும் பிரமாண பத்திரங்களுக்கு நோட்டரி பெறப்பட்டதை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அடையாளம் தெரியாதவர்கள் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிரமாண பத்திரங்களில் உள்ள நபர்களை அழைத்து, அவர்களின் சம்மதத்துடன் தான் அவை தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்துவோம்." என்றார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஷிண்டே அணியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் நரேஷ் மாஸ்கே கூறியுள்ளார்.






