கல்யாண் - முர்பாடு இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி செப்டம்பரில் தொடங்கும்- மத்திய மந்திரி கபில் பாட்டீல் தகவல்

கல்யாண் - முர்பாடு இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி செப்டம்பரில் தொடங்கும் என மத்திய மந்திரி கபில் பாட்டீல் தெரிவித்தார்.
மும்பை,
கல்யாண் - முர்பாடு இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி செப்டம்பரில் தொடங்கும் என மத்திய மந்திரி கபில் பாட்டீல் தெரிவித்தார்.
கல்யாண் - முர்பாடு பாதை
தானே மாவட்டம் பிவண்டி தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான கபில் பாட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கல்யாண் - முர்பாடு இடையே 28 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்க கடந்த 2016-ல் திட்டமிடப்பட்டது. இதற்காக உல்லாஸ்நகர், டிட்வாலாவில் இருந்து முர்பாடு வரை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது இருந்த தேவேந்திர பட்னாவிஸ் அரசும் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருந்தது. ஆனால் அதன்பிறகு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
செப்டம்பரில் தொடங்கும்
தற்போது பொறுப்பேற்று உள்ள ஏக்நாத்ஷிண்டே அரசு இந்த திட்டத்தின் 50 சதவீத செலவை ஏற்று கொள்வதாக கூறியுள்ளது. எனவே இந்த திட்டம் தொடர்பாக சமீபத்தில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னாவை டெல்லியில் சந்தித்தேன். கல்யாண் - முர்பாடு ரெயில்பாதை திட்டப்பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
மேலும் இந்த திட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், " முன்பு நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்த திட்டத்துக்கு ரூ.857 கோடி செலவாகும். இந்த ரெயில் பாதையில் கல்யாண், சாகாத், அம்பிவிலி, கம்பா ரோடு, அப்தி, மம்னோலி, போட்காவ், முர்பாடு ஆகிய நிலையங்கள் வரும்" என்றார்






