நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் 48 தொகுதிகளிலும் போட்டி - பிரகாஷ் அம்பேத்கர் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் அறிவித்து உள்ளார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் அறிவித்து உள்ளார்.
பிரகாஷ் அம்பேத்கர் கட்சி
பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில், எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 6.92 சதவீத வாக்குகளை பெற்றது. இதேபோல சட்டசபை தேர்தலில் 4.58 சதவீத ஓட்டுகளை வாங்கியது. அந்த கட்சி வாங்கிய வாக்குகள் 8 தொகுதிகளில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், இந்தியா கூட்டணியில் தாங்கள் இணைய விரும்பியதாகவும், ஆனால் காங்கிரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறியிருந்தார்.
48 தொகுதிகளிலும் போட்டி
இந்தநிலையில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வஞ்சித் பகுஜன் அகாடி மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளிலும் போட்டியிடும் என பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " நாங்கள் உத்தவ் தாக்கரே சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால் அதில் எந்த தெளிவும் இல்லாமல் உள்ளது. அதற்காக நாங்கள் எதுவும் செய்யாமல் சுற்றிக்கொண்டு இருக்க முடியாது. நேரம் ஓடிக்கொண்டு இருக்கிறது. எந்த கூட்டமும் நடக்கவில்லை. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தங்கள் உட்கட்சி பிரச்சினையில் சிக்கி கொண்டு உள்ளது. இதுபோன்ற சூழலில் எந்த தகவல் தொடர்போ அல்லது முன்னேற்றமோ இல்லை. எனவே நாடாளுமன்ற தேர்தலில் 48 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்து உள்ளோம். நான் அகோலா தொகுதியில் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.