சமூக ஊடகங்களில் சர்ச்சை பதிவால் நாக்பூரில் பதற்றம்- 2 பேர் மீது வழக்குப்பதிவு

சமூக ஊடகங்களில் சர்ச்சை பதிவால் நாக்பூரில் பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாக்பூர்,
நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் குறிப்பிட்ட மதத்தை இழிபடுத்தும் வகையில் சமூக ஊடகமான வாட்ஸ்அப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டதாக தெரிகிறது. இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மற்றொரு நபர் ஊடக தளங்களில் அந்த பெண்ணிற்கு ஆதரவாக களம் இறங்கினார். இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நியூ காம்ப்டி நகரில் உள்ள போலீஸ் நிலையங்களின் வெளியே குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கூடி, சமூக ஊடகங்களில் அவதூறாக பதிவுகள் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். மேலும் சமூக வலைதளத்தில் மோசமான பதிவை வெளியிட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.






